சில கதைகள் நிஜமாகும்போது, அது கனவு போல இருக்கிறது.
நான் எனக்கான பாதையில், மனதில் பல கேள்விகளுடன் பயணிக்கும்போது, என்னை நிறுத்தி,
"நீ எதை நோக்கி பயணிக்கிறாய்?" என்று என்னிடம் கேள்வி எழுப்பினார்.
நான் பதிலளிக்க விரும்பாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
எனினும், தோன்றியதை பதிலாக கூறினேன்.
அதைக் கேட்டுவிட்டு சற்றும் தாமதிக்காமல் "நீ தெளிவாக இல்லை" என்ற பதிலை கூறினார்.
"ஆம்" என்று உரக்க ஆமோதிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் மௌனமாக நின்றேன்.
சிரித்தே கடந்தேன்.
அன்று முழுக்க அந்த உரையாடல் என் மனதிற்குள் ஓடிக்கொண்டே இருந்தது.
அப்படியாக அந்த தேவ தூதர் என் வாழ்வில் வந்தார்.
இப்படி ஒவ்வொரு முறையும் எங்களுக்குள் ஏதாவது உரையாடல் நிகழும், பின்பு அன்றைய நாள் முழுக்க நான் யோசனையில் ஆள்வதும் வாடிக்கையாய் இருந்தது.
எப்போதும் ஒரு புன்னகை மட்டும் அவரை நினைக்கும் போதெல்லாம் என் மனதில் ஏற்படும்.
யாரிடத்திலும் யோசித்து பழகும் நான், அவரிடத்தில் சில உரையாடல்கள் மூலமே இணக்கமாகி போனேன்.
கருத்து பகிர்தலுக்கு ஒரு போதும் பஞ்சமில்லை. மன நிறைவான நாட்கள். வாழ்வில் நாம் மேற்கொள்ளும் பல பயணங்களை, அந்த பயணம் முற்று பெற்றப்பின் அதை எண்ணி மனம் மகிழ்வதையோ நெகிழ்வதையோ வாடிக்கையாக கொண்டிருப்போம். ஆனால் சில பயணங்களை அந்த பயணத்தின் போதே உள்ளம் குளிர ரசிப்போம்.
இந்த பயணம் அப்படிதான் எனக்கு.
எப்போதும் நான் நினைத்து நன்றி சொல்ல பல நல்ல நினைவுகளையும் படிப்பிணையையும் தந்தது. தோன்றும்போதெல்லாம் நினைத்து நன்றி கூறினேன். இனியும் கூறுவேன்.
இப்படிப்பட்ட மனதுக்கு நெருக்கமான பயணத்தை யாரும் முடித்துக்கொள்ள விரும்ப மாட்டார்கள் தானே.. நானும் விரும்பவில்லை.
(இனியும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்...)